பாராளுமன்றத் தேர்தல் – 2015

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக நேர்மையான தேர்தலாக கணிக்கப்படுகிறது. ஐ.தே.கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – சரியான கருத்தில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பாரம்பரியக் கட்சிகளுக்குமிடையிலான வழமையான போட்டி அதன் உச்ச நிலையை அடைந்து ஐ.தே.கட்சி ஏறத்தாழ 3% வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இரு கட்சிகளும் முறையே 45.66%, 42.38% என்ற வாக்கு விகிதாசாரத்தைப் பெற்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும் சரி, அதனைத் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தலும் சரி இலங்கையின் வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்கள். இன உணர்வு கூர்மையாகி எழமுயன்ற சமூக சூழலில் இவ்விரு தேர்தல்களும் நடந்து முடிந்தன. பயங்கர 30 வருடகால யுத்தத்தில் தமிழர்கள் தோல்வியடைந்ததன் பின்னர் “என்னை வெல்வதற்கு யாருமில்லை” என்ற எண்ணத்தோடு ஆட்சியில் அமர்ந்த மஹிந்த ராஜபக்ஷ 3வது முறையாகவும் ஜனாதிபதியாக முயற்சித்தமையே ஜனாதிபதித் தேர்தலின் முன் கூட்டிய அறிவிப்பும், தேர்தலும்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஒரு பெரிய கட்டத்தைத் தாண்ட எந்த ஆட்சித் தலைவருக்கும் கிட்டாத அருமையான சந்தர்ப்பமொன்று கிடைத்தது. அவர் தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தை வென்றார். விளைவாக சிங்கள மக்களுக்கு மத்தியில் ‘சிங்களம்’ காத்த வீரரானார். துட்டகைமுனுவின் வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்கலானார். சிங்கள மக்களின் உயர்ந்த நம்பிக்கையைப் பெற்றார். எனவே சிங்கள மக்களின் எதிர்ப்பின்றி அவர் இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கி நகர்ந்திருக்கலாம். அப்படி நகர்ந்திருந்தால் மூன்று சமூகங்களினதும் தேசியத் தலைமையாக மாறும் வரலாற்றின் அரிய சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அவர் பிழையான வழிநடந்தார். பிழையாக வழிநடாத்தப்பட்டார்.

தமிழர்கள் அவரிடத்தில் இரக்கத்தையும், கருணையையும் காணவில்லை. அனுதாபத்தோடு அவர்களோடு உட்கார்ந்து பேசுவதைக் காணவில்லை. முனைப்போடு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைவதையும் அவதானிக்கவில்லை. இறுக்கத்தையும், விட்டுக்கொடுக்காமையையும், நெருக்குதலையுமே கண்டார்கள். எனவே அவர்கள் அவரை ஆதரிக்கவில்லை. விரும்பவில்லை.

முஸ்லிம்களுக்கெதிரான போக்குகளும் அவரது காலத்தில் எழுந்தன. அதன் உச்சநிலையாக அளுத்கமையின் பாரிய கலவரம் நடந்து முடிந்தது. இந்த வகையில் முஸ்லிம்கள் மஹிந்த ஜனாதிபதியின் காலத்தில் பயமும், பீதியும் கொண்டவர்களாக வாழ்ந்தனர்.

அத்தோடு சிங்களத் தீவிரவாத அமைப்பொன்று எழுந்தது. அது விஷேட நிகழ்வன்று. ஆனால் அரச அங்கீகாரத்தோடும், ஆதரவோடும் அது இயங்கியது என்று பரவலாக நம்பப்பட்டமைதான் ஒரு வித்தியாசமான நிகழ்வாகியது. இந்த அமைப்பு நேரடியாகவே முஸ்லிம்கள் மீது பாய்ந்தது. ஹலால், ஹராம் பிரச்சினை இதன் ஆரம்பமாகியது.

இந் நிலையில் முஸ்லிம்களது ஆதரவையும், அபிமானத்தையும் முன்னால் ஜனாதிபதி ராஜபக்ஷ இழந்தார். நாட்டில் நிலவிய இந்த நிலையைக் கண்டு சிங்களப் புத்திஜீவிகள் பலரும் சில அரசியல் தலைமைகளும் கவலையுற்றன. அத்தோடு ராஜபக்ஷயின் ஆட்சி குடும்ப ஆட்சியின் வடிவமெடுத்தது. ஊழலும், துஷ்பிரயோகமும் நாட்டின் சொத்துக்களை அபகரிப்பதுவும் மிகவும் கூடியது. இது அவர்களது கவலையை மேலும் கூட்டியது. அரசியல் மாற்றத்தின் இன்றியமையாமையைக் காட்டியது. விளைவாக எதிர்கட்சிகளும் புத்திஜீவிகலும் மாற்றத்தைக் கொண்டுவர உழைக்கத் துவங்கினார்கள். இறுதியில் சிங்கள சமூகத்தின் ஒரு பெரியளவிலான ஆதரவோடும் சிறுபான்மை சமூகங்களின் ஏறத்தாழ முழுமையான ஆதரவோடும் மஹிந்தவை ஜனாதிபதி நிலையிலிருந்து வீழ்த்துவது ஜனாதிபதித் தேர்தலோடு சாத்தியமாகியது. பாராளுமன்றத் தேர்தலோடு ராஜபக்ஷ சார்பு ஆட்சியை வீழ்த்துவதுவும் சாத்தியமாகியது.

ஆனாலும் நாடு அடைந்திருக்கும் வெற்றி பூரணமானதல்ல. ராஜபக்ஷவின் ஆட்சியில் பாரியளவு அபகரிப்பும், ஊழலும், துஷ்பிரயோகங்களும் நிகழ்ந்தும், இனத்துவேஷம் நோக்கி நாடு இழுபட்டுச் சென்றமை காணப்பட்டும் மஹிந்த அணியினரின் தோல்வி சிறியதே. எனவே அந்த அணியை ஆதரிப்போர் ஒரு பெரிய சக்தி என்பதில் சந்தேகமில்லை. இப்படி ஒரு பிற்போக்கு சக்தி நாட்டைப் பின்னே இழுப்பது தெளிவு. எனினும் நாடு முன்னே போகத் துவங்கிவிட்டது. விக்டர் ஐவன் குறிப்பிடுவது போல் நொண்டி, நொண்டியாவது நாடு முன்னேதான் செல்ல வேண்டும். அவ்வாறு நாடு பிற்போக்கு சக்திகளை தோற்கடித்து முன்னேற வேண்டுமானால் ஆட்சித் தலைமைகள் தூய்மையும், அறிவும், உறுதியும் கொண்டதாக அமைய வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் மிகச்சீராகத் தூய்மையாக நடந்து முடிந்தது. காரணம் அரசியற் தலைமையின் தூய்மை, உறுதி, செயற்திறன். அரசியல் தலைமைகள் மட்டும் தூய்மையையும் உறுதியும் கொண்டியங்கினால் பாரியளவு சாதிக்கலாம் என்பதனை இது காட்டுகிறது.

நாட்டில் ஒரு பெரிய மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை சாதிக்க ஒரு விரிந்த செயற்திட்டம் அவசியமானது. அடுத்து அதனை நடைமுறைப்படுத்தலுக்கான பொறி முறையும் அவசியமானது. இரண்டு அடிப்படையான செயற் திட்டங்கள் இங்கே முதன்மையாக முன்வைக்கப்படலாம்:

இன உணர்வு துவேஷமாகி இன மோதல்களுக்கு வழிவகுத்தமையே இந்நாட்டின் பாரிய பின்னடைவுக்க காரணமாகியது என்பது தெளிவு. இன உணர்வு கூர்மையடைவதிலிருந்து காத்து இனங்கள் பரஸ்பர ஒற்றுமையுடன் இயங்கும் சூழலை உருவாக்க கல்வி, பயிற்றுவித்தல் ரீதியான ஒழுங்கொன்று மிக அவசியம். சிறுபான்மை இனங்களின் பயத்தையும், பீதியையும் நீக்கத் தக்க அரசியல் பாதுகாப்புகள் உறுதி செய்யப்படுவது அடுத்த முக்கிய அம்சம். இவ்விரண்டும் நாட்டின் ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியவசியமானவையாகும்.

இரண்டாவது அடிமட்ட மக்களும், நடுத்தர வாழ்வு மட்டம் கொண்ட மக்களும் அமைதியாக வாழ்வதற்கான பொருளாதார ஒழுங்கொன்று மிக அடிப்படையானது. உணவு, வீடு, உடை போன்ற அத்தியவசியத் தேவைகள், கல்வி, சுகாதாரம் என்ற முக்கியத் தேவைகள் மிக இலகுவாக நிறைவேற்றப்படும் பொருளாதார ஒழுங்கு உருவாக்கப்பட வேண்டும். வாழ்வின் இத்தகைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூட உடலையும், உள்ளத்தையும் மிகக் கடுமையாக வருத்திப் பாடுபட்டு அல்லலுற்று, அவலங்களைச் சந்தித்து, சுய மரியாதையையும் இழந்து நிற்கும் நிலை எந்தத் தனி மனிதனுக்கும் இருக்கக் கூடாது.பொருளாதார நிலை சீரில்லாத மனிதனிடம் நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. ஒழுக்கம், பண்பாடு, சமூகப் பற்று, நாட்டுப்பற்று என்பவற்றைக் கூட அவனிடம் எதிர் பார்ப்பது கூட மிகவும் கடினம்.

தெரிவு செய்யப் பட்டிருக்கும் ஆளும் கட்சி -அது தேசிய அரசாங்கம் என்ற வடிவெடுத்தாலும்- இவ்விரு பாரிய வேலைத்திட்டங்களையும் கொண்டுசெல்லும் தூய்மையும், உறுதியும், செயற்திறனும் கொண்டதுதானா? என்ற கேள்வி இப்போது எழுகிறது. இங்கு நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கத் தேவையுமில்லை. அதேவேளை பெரிய அளவு நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை.

இந்த நிலையில்தான் ஓரளவு நீண்ட எதிர்காலம் குறித்த திட்டமிடலும் அவசியமாகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு கட்சிகளும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் தோல்வியுற்றன என்பது வரலாற்றின் மறுக்க முடியாத உண்மை. தொடர்ந்து அக் கட்சிகள் மீது எதிர்பார்ப்பு வைப்பது அவ்வளவு தூரம் பொருத்தமானதல்ல. எனவே மூன்றாவது அரசியல் சக்தியொன்றைத் திட்டமிட்டுக் கட்டியெழுப்புவது தற்போதைய வரலாற்றுக் கடமை. இது பற்றி நாம் இரண்டு வகையில் சிந்திக்கலாம்.

ஒன்று JVP என்ற அரசியற்கட்சி. அந்தக் கட்சியே மூன்றாம் சக்தியாக எழும்ப முடியும் என்ற நிலை உள்ளது. அதன் புதிய தலைவர் அநுர திஸாநாயக்க சமகால நிலையை ஒத்து சிந்திக்கத் தெரிந்த கவனமான, நிதானமான தலைமை என்று தெரிகிறது. எனினும் ஒரு பலமிக்க மூன்றாம் சக்தியாக எழுவதில் இன்னும் JVP வெற்றியடையவில்லை. அது பற்றி அக்கட்சி கீழ்வரும் இரு கோணங்களில் சிந்திக்க வேண்டும் எனக் கருதலாம்:
(1) JVPக்கு ஒரு சோஷலிச, கம்யூனிஸ வர்ணம் உள்ளது. அது இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்கவில்லை. சோஷலிச சிந்தனை சர்வதேச மட்டத்திலும் செல்வாக்குடையதாக இன்றில்லை. தேசிய ரீதியாகவும் அதற்கு அங்கீகாரமில்லை. இந் நிலையில் JVP தனது போக்கை சமூக யதார்த்தத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளல் மிக அவசியமானது.

(2) சிறுபான்மை சமூகங்களுடனான JVPயின் தொடர்பு யாது? அவர்களது பிரச்சினைகள் பற்றி JVPயின் நிலைப்பாடு என்ன? இவ்விடயம் மிகுந்த தெளிவுடன் முன்வைக்கப்பட வேண்டும். அது JVPயின் பக்கம் சிறுபான்மையினர் சாரக் காரணமாக முடியும். JVP ஒரு தூய்மையான அரசியற் போக்கைக் கொண்டது என்று முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார் உணர்ந்து கொண்ட போது JVP சார்பு அலையொன்று என்றுமில்லாதவாறு முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றில் எழுந்தமையை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். முன்னால் ஜனாதிபதியின் கை ஓங்கி விடுமோ என்ற பயம் மட்டும் முஸ்லிம்களிடம் இருந்தில்லாவிட்டால் அந்த அலை இன்னும் பாரியதாக அமையச் சந்தர்ப்பமிருந்தது.

அடுத்த சக்தி சிறுபான்மையினராவர். தமிழ், முஸ்லிம் சிறுபான்மை என இணைத்து நோக்கும் போது அது மிகப் பலமிக்க சக்தி. அவர்களுக்கு மத்தியில் சில குறிப்பிட்ட விடயங்களிலாவது பொது உடன்பாட்டுக்கு வரத்தக்க அம்சங்கள் இருக்குமாயின் அவர்கள் இந் நாட்டின் ஓரங் கட்டமுடியாத சக்தியாவர்.

சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுத்தல் என்ற அம்சத்தோடு மட்டும் நின்றுவிடாது மனித உரிமைகளைப் பேணுகின்ற, ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற பொருளாதார சுதந்திரம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்பல் என்ற பொது வேலைத் திட்டத்திற்கு ஏன் வரக்கூடாது. அந்நிலையில் சிங்கள சமூகத்தில் நியாயமாக சிந்திக்கும் பல புத்திஜீவிகள் சிறுபான்மையிருடன் கை கொடுக்க முன் வருவர். அப்போது அனைத்து சமூகங்களையும் இணைத்ததொரு தலைமைத்துவம் உருவாகல் சாத்தியமாகும்.

1956 முதல் போராடிய தமிழ் சமூகம் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிப் பயங்கர இழப்புகளுடன் வெளி வந்துள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தை ஜனநாயக தேசியம் என்ற கருத்தியல் அடிப்படையில் ஏன் ஆரம்பிக்கக் கூடாது. அது ஒரு பொது வேலைத் திட்டம் அனைத்து சமூகங்களினதும் நியாயமான புத்திஜீவிகள் இணையும் வேலைத்திட்டம். தமிழ் சமூகம் ஆயத போராட்ட வாழ்வில் சிங்கள ஆயுதத்தால் மட்டுமல்லாது தமது சொந்த ஆயுதத்தாலேயே பாரியளவு பாதிக்கப்பட்டமை, 56 முதல் தந்தை செல்வநாயகம் “இனித் தமிழ் சமூகத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி 1976இல் இறந்தது வரை நடந்த அஹிம்சைப் போராட்டமும் தோல்வியில் முடிந்தமை என்ற அனுபவங்களைத் தொகுத்து நோக்குகையில் போராட்டத்தில் இனி எஞ்சி இருப்பது நாட்டை முழுமையாகச் சுத்தீகரிப்பதுதான். தோல்விகளுக்கு அந்த சுத்தீகரிப்பு இன்மையே காரணம் என்ற முடிவுக்கு ஏன் வரக் கூடாது.

இந்தத் தேர்தல் முடிவின் படி தமிழர்கள் ஒரு பலமிக்க சக்தியாகப் பாராளுமன்றத்தில் நுழைந்துள்ளனர். அவர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டு சாதிக்கப் போவது என்ன? மீண்டும் தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்புவது மட்டுமா? அவர்களது வேலைத்திட்டம். குறைந்தது 1976க்கு முன்னரான அரசியற் போராட்டத்தைக் கூடச் செய்ய முடியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கதக்கது.

முஸ்லிம் அரசியல் வேலைத் திட்டம் ஏதோ ஒரு தொகையினரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்று விடுகிறது. 15 பேர் தெரிவின் மூலமும் 6 பேர் தேசியப் பட்டியில் ஊடாகவும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். பல புது முகங்களையும் இங்கே அவதானிக்க முடிகிறது. எனினும் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக வழிநடாத்தும் தகைமைகளாக இவர்களைக் காணமுடியுமா என்பது கேள்விக் குறியே.

தலைவர் அஷ்ரப் முஸ்லிம் பாரம்பரிய அரசியல் போக்கில் ஒரு நல்ல அதிர்வை ஏற்படுத்தினார். எனினும் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் வேலைத்திட்டத்தை அவரால் நல்ல தெளிவுடன் வகுக்க முடியவில்லை என்பதே உண்மை.

முஸ்லிம் சமூக அரசியல் தலைமையில் கண்டிப்பாக பாரிய மாற்றம் தேவை. ஆனால் அது மிக வேகமாக நடப்பது சாத்தியமில்லை. எமது அரசியல் பாரம்பரியமும் சமூக நிலையும் அத்தகையது. ஓரளவு நீண்ட வேலைத் திட்டமொன்று அதற்கு தேவை அந்த வேலைத்திட்டங்கள் கீழ்வருமாறு அமையலாம்:
(1) சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வை தோற்றுவிக்கும் வேலைத்திட்டங்கள்.
(2) அரசியல் தலைமைகளை அறிவு ரீதியாகவும் நடைமுறைப் பயிற்றுவித்தல் ஊடாகவும் உருவாக்கல்.
(3) சிறிய ஆட்சி மன்றங்களிலிருந்து துவங்கல் – பிரதேச சபைகளிலிருந்து ஆரம்பித்தல்.
(4) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்தல்.
(5) JVP போன்ற கொள்கை வாத அரசியற் கட்சிகளில் பயிற்சி பெறல்.

இவற்றோடு அரசியல் நிறுவன ஒழுங்கொன்றை உருவாக்கல், அவசியற் கட்சியையன்று. இந்த நிறுவனம் முதன்மையாக அரசியற் கொள்கை. செயற்திட்டம் ஒன்றை விரிந்த ஆய்வு, ஆழ்ந்த கலந்துரையாடல்களின் பின்னர் உருவாக்கிக் கொள்ளல்.

இப்படியொரு பரந்துபட்ட ஆழ்ந்த வேலைத்திட்டத்தின் ஊடாகவே எமது அரசியல் போக்கைச் சீர்த்திருத்தலாம். உணர்ச்சி பூர்வ, வேகமான, திட்டமற்ற அரசியல் நுழைவுகள் சரியான விளைவுகளைக் கொடுக்கா என்பதோடு சிலபோது மீண்டும் எழுவதற்குச் சிரமமான மோசமான எதிர்விளைவுகளைக் கொடுக்கவும் முடியும்.

எமது அரசியல் பிணக்க அரசியலா? இணக்க அரசியலா? இணக்க அரசியலே எமது பாரம்பரியம். எனினும் அரசியல் ரீதியாக நாம் சாதித்தவைகள் மிகக் குறைவு. இழந்தவைகள் அதிகம். வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையில் நாம் சாதித்தது மிகக் குறைவு. எமது பாடசாலைகளின் நிலை பரிதாபத்துக்குரியது. பொருளாதாரப் பகுதியில் நாம் அடைந்திருக்கும் பின்னடைவும் பாரியது.

இந்தத் தேர்தலில் நாம் அவதானிக்க வேண்டிய விடயம் மிக முக்கியமாக ஒன்றுள்ளது. சிங்களத் தீவிரவாதம் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது என நாம் கூற முடியாது பொதுபலசேனவின் BJP மொத்தமாக 20,395 வாக்குகளைப் பெற்றுள்ளமை ஒரு அபாய சமிக்ஞையே. தீவிரவாதம் வளர ஆரம்பிக்கிறது என்பது இதன் பொருள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு விழுந்த வாக்குகளில் ஒரு கணிசமான தொகை தீவிர வாதத்திற்கு சார்பான வாக்குகள். இப்பின்னணியில் எமது வேலைத்திட்டத்தைக் கவனமாக நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பகுதியில் நாம் உணர வேண்டிய உண்மை:

“தமிழர்கள் சிங்கள சமூகத்தின் அரசியல் எதிரிகள்” ஆனால் “முஸ்லிம்கள் சிங்கள சமூகத்தின் பௌத்த மதம், கலாச்சாரம் என்பவற்றிக்கான அச்சுறுத்தல்.” என நோக்கப் படுகிறார்கள்.

இந்த யதார்த்தத்திலிருந்துதான் நாம் எமது சமூக, அரசியல் வாழ்வை நோக்க வேண்டும். சிதறியும், சிறுபான்மையாகவும் வாழும் நாம் இந்த யதார்த்தத்திலிருந்து எம்மை ஒழுங்கு படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

தேசிய மைய நீரோட்டத்தில் கலத்தல் என்பது எமது முதன்மைப்பட்ட வேலைத்திட்டமாக இருக்க வேண்டும். அதன் நடைமுறைப் பிரயோகம் என்ன என்பது வகுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மைய நீரோட்டத்தில் கலப்பதன் ஒரு பகுதி பல வகையிலும் சீர்கெட்டுப் போயுள்ள இந் நாட்டைக் கட்டியெழுப்புவதாகும். அந்தமுன்மாதிரியும், வேலைத் திட்டமும் எமது அரசியல் தலைமைகளிடம் இருக்குமா?

சீர்நிலையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகவாவது நாடு செல்லும் என எதிர்பார்ப்போம்.

புதியதொரு அரசியல் யுகம், தலைமை நோக்கிப் புறப்படுவோம்.

Reply