சுகாதாரப் பகுதி – சமூக இயக்கம்

முஸ்லிம் சமூகத்தின் அடுத்த இயக்கம் சுகாதாரப் பகுதி சார்ந்ததாகும். மனிதனின் உடலும், உள்ளமும் அந்தப் பகுதியின் இரு அடிப்படை அம்சங்களாகும். உடல், பௌதீக சுகாதாரம், மருத்துவம் சார்ந்தது. உள்ளம், மனோதத்துவவியல் சார்ந்தது. மனிதன் எனும் போதே இவ்விரண்டு பகுதியுமே உள்ளடங்குகின்றன.

உடலை நோய் வரும் முன்னே பாதுகாத்துக் கொள்ள சிறந்த உணவுப் பழக்கம், உடற் பயிற்சி, சுத்தத்தைப் பேணும் வாழ்க்கை முறை என்பன அத்தியவசியமானவையாகும். அவ்வாறே உள்ளம் சீராக இருக்க முறையான சிறந்த பிள்ளை வளர்ப்பு, சிறந்த கல்வி முறைமை, முறையாக வகுக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சி, பொருத்தப் பாட்டுடன் அமைந்த திருமண வாழ்வு, தேவைகள் நிறைவேறத்தக்க பொருளாதார பலம் என்பன அடிப்படையானதாகும்.

இப் பகுதியை சீர் படுத்துவதில் பல்வேறு பிரிவினரின் பங்களிப்பு அவசியமாக உள்ளது என்பது உண்மையாயினும் அவற்றை ஓரளவு ஏற்கனவே விளக்கினோம். இங்கு குறிப்பாக இருவகை மருத்துவ துறை சார்ந்தவர்களை எடுத்துக் கொள்கிறோம். ஒன்று உடல் சார் மருத்துவம். அடுத்தது உள்ளம் சார் மருத்துவம்.

இந்த இரண்டு சாராரதும் பங்களிப்பு மிகப் பாரியதாகும். உடல் சுகமும், பலமும் பெற்றிருப்பது அனைத்து மனித இயக்கத்திற்கும் அடிப்படையானதாகும். இப் பகுதியில் மருத்துவர்களது பங்களிப்பு இரண்டு வகையாக அமைகிறது.

  1. நோய்கள் வரு முன்னரே பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் பற்றிய விழிப்புணர்வை சமூகத்திற்கு மத்தியில் மிகவும் கவனமாக, திட்டமிட்டு பரப்புதல்.
  2. நோயின் போது மருந்து பாவிப்பில் கையாள வேண்டிய மிகச் சிறந்த முறை பற்றி சமூகத்திற்கு விளக்குதலும், மருத்துவர்கள் கூட்டாக அதனைக் கடைப் பிடித்தலும்.

இப் பகுதியில் இரண்டு முக்கிய விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அ. எம்மிடையே ஆங்கில மருத்துவ முறையோடு,  ஆயுர்வேத, யூனானி, ஹோமியோபதி என பல மருத்துவ முறைகள் உள்ளன. அவை அனைத்தினதும் பங்களிப்பு கிடைக்குமாறு அவற்றை திட்டமிட்டமுறையில் சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும்.

ஆ. ஆங்கில மருத்துவ முறை பற்றி மிகவும் விரிந்த உலகளாவிய ரீதியான கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அந்த விமர்சனங்களில் சந்தேகமின்றி பல ஆழ்ந்த உண்மைகள் உள்ளன. இது பற்றிய அறிவு குறிப்பாக எமது ஆங்கில மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மிகவும் அவசியமாகும். அது பற்றிய அறிவோடு எமது மருத்துவர்கள் இயங்கும் போது அது ஆங்கில மருத்துவ உலகில் காணப்படும் தீமைகளுக்கெதிரான ”ஜிஹாத்“ என இஸ்லாமிய ரீதியாக அடையாளப்படுத்த முடியும்.

உள்ளம் சார்ந்த மருத்துவர்கள் என்பது மனோதத்துவவியல் துறை சார்ந்தோரைக் குறிக்கிறது. மனித மனம் மனித இயக்கத்தின் அடிப்படையான பகுதி. அதன் சீரற்ற இயக்கம் உடல் நோய்களுக்கும் காரணமாக அமைகிறது என்பது மருத்துவ உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்

உளநலம் கொண்ட மனிதர்களே கல்வி, குடும்பம், சமூகம் எல்லாப் பகுதியிலும் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும். இத்துறை சார்ந்தவர்கள் மூன்று வகையில் இயங்க வேண்டிய தேவை உள்ளது.

  1. மனப் பக்குவம், உணர்வுகள் சார் விவேகம் என்ற பகுதிகளை சமூகத்திற்கு அறிமுகப் படுத்தி அது சார் பயிற்றுவித்தல்களை முஸ்லிம் கிராமங்கள் தோறும் உருவாக்கிச் செல்லல்.
  2. உளநலக் கல்வியில் அதாவது மனோதத்துவவியல் பகுதியில் அதி உயர் அறிவுத் தரத்தை அடைவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளில் இயங்குதல்.

இவ்வாறு மருத்துவம், உளவியல் இரு பகுதிகளையும் அவை சார் சமூகப்பங்களிப்பையும் எடுத்து நோக்கும் போது அங்கும் அத் துறை சார் நிபுணர்களது பங்களிப்பு மிகவும் அடிப்படையானது என்பதை விளங்கிக் கொள்கிறோம். ஏற்கனவே விவரித்த கட்டுரைத் தொடரின் பின்னணியில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், முறையான  வாழ்வுக்கும் துறைசார் நிபுணர்களது பங்களிப்பு அடிப்படையானது எனப் புரிந்து கொள்கிறோம். இக் கருத்தை அடுத்தமுறை இன்ஷா அல்லாஹ் விரிவாக நோக்குவோம்.

Reply