இலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றின் ஒரு மிக சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளனர். அடுத்த சமூகங்களுடனான உறவாடல் ஒரு கொதிப்பு நிலை நோக்கி தள்ளப்படும் கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது எம்மை நாம் எவ்வாறு இந்த நாட்டு சமூக யதார்த்த நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது பொறுத்து எமது எதிர்கால வாழ்நிலை அமையப் பொகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.

எமது வாழ்வின் சீர் நிலைக்கான போராட்டம் என்பது இரு பகுதிகளாக உள்ளது. ஒன்று எமது மார்க்க அனுஷ்டானங்கள் சம்பந்தப்பட்டது. அது கீழ்வரும் பகுதிகளை உரிமை போராட்டமாக மாற்றும் நிலையை எய்த முடியும்:

 • பெண்களின் ஹிஜாப்
 • தாடி, ஜுப்பா
 • ஜும்மா தொழுகையின் நடைமுறைப் பிரயோகம்
 • பள்ளி கட்டுதலின் தாக்கங்கள்
 • பாங்கு சொல்லல்
 • நோன்பு கால நடவடிக்கைகள்
 • உணவுப் பகுதியில் ஹலால், ஹராம்
 • தேசிய கீதம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள், நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
 • உழ்ஹிய்யா, மாடறுத்தல்
 • முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லல், அவர்களது சுகதுக்கங்களில் கலந்து கொள்ளல் போன்ற அவர்களுடனான உறவாடல் நிகழ்வுகள்
 • முஸ்லிம் அல்லாதவர்களின் நம்பிக்கைகள், அவர்களது வணக்கங்கள், அவர்களது வணக்கஸ்த்தலங்கள் என்பவற்றோடு சம்பந்தப்படும் எமது நடத்தைகள்.
 • முஸ்லிம் விவாக, விகாரத்து பிரச்சினைகள்

இரண்டாவது பகுதி எமது சமூக வாழ்வோடு சம்பந்தப்படும் விவகாரங்களாகும். அதனைக் கீழ்வருமாறு சுருக்கித் தரலாம்.

 1. பொருளாதார வாழ்வோடு சம்பந்தப்படும் எமது உரிமைகள், எம்மை அப்பகுதியில் பலப்படுத்திக் கொள்வதற்கான உபாயங்கள்.
 2. கல்விப் பகுதியில் எமது உரிமைகள், எமக்குக் கிடைக்க வேண்டிய வளங்கள், அப்பகுதியில் எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான வழி வகைள்.
 3. எமது நிலங்கள், இருப்பிடங்கள், போன்றவற்றை காத்து, வளர்ப்பதற்கான உரிமைகள்.
 4. இந்த நாட்டை கீழ் மட்டத்திலிருந்து உயர் நிலை வரையில் ஆள்வதில் பங்கு கொள்வதற்கான எமது நியாயமான உரிமைகள்.
 5. அரச, தனியார் துறைகளி்ல் எமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தொழில் வசதிகள்.
 6. நியாயமாக எமக்குக் கிடைக்க வேண்டிய அரசயில் பிரதிநிதித்துவம். ஏற்கனவே குறிப்பிடப்பட்ட 4ஆம் பகுதியோடு இது தொடர்பு படுமாயினும் அதன் தனியான முக்கியத்துவம் குறித்து வேறாகக் குறிப்பிடப் பட வேண்டியதாயிற்று.

இந்த இரண்டு பகுதிகளிலுமே ஒரு பாரிய உரிமைப் போராட்டத்தை நாம் கொண்டு செல்வதா? அது எந்தளவு தூரம் சாத்தியமானது! முதலாம் பகுதிக்கான போராட்டம் இரண்டாம் பகுதிக்கான போராட்டத்தை மறக்கடிக்கச் செய்துவிடுமா? முதல் பகுதியை ஓர் அரசியல் தந்திரோபாயமாகப் பாவிக்கும் சந்தர்ப்பம் முஸ்லிம் அரசியலவாதிகளிடமும் அடுத்த அரசியல் கட்சிகளிடமும் காணப்பட முடியுமா? முதலாம் பகுதிக்கான போராட்டம் மதத் தீவிரவாதம் எனக் காணப்பட்டு ஓர் எதிர்ப்பிரச்சாரமாக உருவெடுக்குமா? அத்தோடு முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை விட்டு மேலும் அந்நியப்பட அது காரணமாகுமா?

இத்தகைய கேள்விகளின் பின்னணியில் முதற்பகுதியைப் பொருத்தவரையில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்டப் பகுதியை நோக்கி முஸ்லிம்கள் நகர வேண்டும் என்ற சிந்தனை பொருத்தமாக அமைய முடியும் எனக் கருதலாம். அவ்வாறு செய்தல் என்பது நான்கு மத்ஹபுகளுக்கு வெளியே ஸஹாபாக்கள், தாபியீன்கள், பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஏனைய இஸ்லாமிய சட்ட நிபுணர்களது தீர்ப்புக்கள் என்பவற்றையே குறிக்கிறது. இந்நிலையில் நாம் அப்பகுதியிலான உரிமைப் போராட்டங்களையும் அவற்றால் உருவாகும் பிரச்சினைகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். மத இறுக்கம் கொண்ட சமூகம் என்ற நிலையை விட்டு தாராளப் போக்கு கொண்ட சிவில் சமூகமாக எம்மைப் பார்க்கும் நிலை அப்போது தோன்ற முடியும். அது எமது வாழ்வுக்கு மிகவும் சாதகமானது. இந்த சிந்தனையையே நவீன கால இஸ்லாமிய அறிஞர்களும் சில இஸ்லாமிய சட்ட மன்றங்களும் “இஸ்லாமிய உலகுக்கு வெளியிலான சட்ட ஒழுங்கு” எனக் கூறுகின்றனர். “பிக்ஹ் அல் அகல்லிய்யாத்” என்ற பிரயோகத்தையும் இதனைக் குறிக்க அறிஞர்கள் பாவிப்பர். எனினும், அப்பிரயோகத்தின் பொருத்தப்பாடு குறித்து சர்ச்சைகள் உள்ளன.

சமூக வாழ்வு சார் இரண்டாம் வகைப் போராட்டமே மிகவும் அடிப்படையானதும் எமது பலமான இருப்பை நிர்ணயிப்பதும் ஆகும். அப் பகுதியே அழுத்தம் கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டும். மார்க்க அனுஷ்டானங்களோடு சம்பந்தப்படும் முதலாம் வகைப்பிரச்சினைகள் அவற்றை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் கிளைப் பிரச்சினைகள் மட்டுமேயாகும்.

எமது பலம், எமது மக்கள் மனோ நிலை, போராட்டக் களத்திற்கு வரும் புத்திஜீவிகளது தொகையும், அவர்களது அர்ப்பணமும், எமது அரசியல்வாதிகளது நிலை என்பவற்றை எல்லாம் கவனத்திற் கொண்டு இப்பகுதி பற்றிய தீர்மாணத்திற்கு நாம் வர வேண்டும்.

இது பற்றியதொரு பரந்த, ஆழ்ந்த கருத்துப் பரிமாறல், கலந்துரையாடல் முதலில் புத்திஜீவிகளுக்கு மத்தியில் நடந்து செல்ல வேண்டும்.

இஸ்லாமிய அறிவோடு குறிப்பாக சமகால இஸ்லாமிய அறிவோடு சம்பந்தப்பட்ட ஒரு தொகையினர் எம் மத்தியில் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலான கூட்டொழுங்கும் கூட்டுச் செயற்பாடும் தற்போதைய அவசியத் தேவையாகும்.

மக்களை வழிநடாத்தலும் அவர்களுக்கு விளிப்புணர்வூட்டலும் எக் காலத்தையும் விட இன்று அதிகமதிகம் தேவைப் படும் விடயமாகும். இப் பணியைக் கிராமம், கிராமமாக மேற் கொள்ள வேண்டிய தேவை மிக அடிப்படையானதாகும். இங்கு தவறினோமாயின் அடுத்து வரும் எமது சந்ததியினருக்கு ஓர் அபாயமான இலங்கை நாட்டையே நாம் விட்டுச் செல்வோம்.

Reply